வாகீஸ்வரர்-சுவாந்தர நாயகி

ஞான தீர்த்த விநாயகர்

பைரவர்கள்

சிவனை வழிபடும் சரஸ்வதி

தல அமைவிடம்

மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் இருக்கிறது சாவடி என்கிற ஊர். இங்கு இறங்கிக்கொண்டு, கிழக்கே செல்லும் தார்ச்சாலையில் சுமார் 2 கி.மீ. பயணித்தால் ஆலயத்தை அடையலாம். மயிலாடுதுறை - திருவாரூர் தடத்தில் பேருந்து வசதி அதிகம். மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கடக்கம் செல்லும் 8ஆம் எண் பேருந்தும், செம்பனார்கோயில் செல்லும் சில பேருந்தும் ஆலய வாசல் வரை செல்லும்.

திருக்கோவிலின் அமைப்பு

எண்ணூறு ஆண்டுகள் பழைமையான இவ்வாலயம் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக ஸ்தலபுராணம் சொல்கிறது. ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் தலவிருட்சம் பன்னீர் மரம். ஈசான்யதிக்கில் ஞானதீர்த்தம் உள்ளது. குளக்கரையில் ஞான தீர்த்த விநாயகர் அருள்பாலிக்கிறார்.

இங்கு அருள்பாலிக்கும் இறைவன் வாகீஸ்வரசுவாமி, இறைவி சுவாதந்தரநாயகி. முகப்பைக்கடந்ததும் அகன்ற பிரகாரம், கொடிமரம், நந்தி, பலிபீடம். இவற்றைக்கடந்ததும் மூன்று நிலை ராஜகோபுரம். அதை அடுத்து சிறப்பு மண்டபம். மண்டபத்தின் வலதுபுறம் இறைவியின் சன்னதி. அடுத்துள்ள மகாமண்டபத்தை அடுத்து அர்த்தமண்டபமும், அதையடுத்து கருவறையும் உள்ளது.

கருவறையில் வாகீஸ்வரர் லிங்கத்திருமேனியாக கிழக்குநோக்கி அருள்பாலிக்கிறார். இங்கு ஆவுடையார் சதுரவடிவில் அமைந்திருப்பதும், இறைவனின் விமானம் இந்திரவிமானமாய் வட்டவடிவில் அமைந்திருப்பதும் சிறப்பாகும்.

உட்பிராகாரத்தில் சரஸ்வதிதேவி சிவபெருமானை பூஜை செய்யும் சிற்பம் மிக அற்புதமாக அமைந்துள்ளது. தேவகோட்டத்தின் தென்திசையில் விநாயகர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தியும், மேற்கில் அண்ணாமலையாரும், வடக்கில் பிரம்மாவும், துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.

பிராகாரத்தின் மேற்கில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, கஜலட்சுமியும், சந்திரன் வழிபட்ட லிங்கமும், வடக்கில் பிரம்மனும், சண்டிகேசுவரர் சன்னதியும் உள்ளன. வடகிழக்குமூலையில் நவகிரகநாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். கிழக்குப்பிராகாரத்தில் நான்கு யுகங்களைக்குறிக்கும் நான்கு பைரவர் திருமேனிகள் உள்ளன. இழந்ததை மீட்டுத்தருவதில் விரைந்து அருள்புரியும் கலியுகபைரவர் வீற்றிருக்கும் அற்புத ஸ்தலம் இது.