வரலாறு
வியாழன் மயூரநாதருக்கு தென்பால் தாருகாவனத்தில் லிங்கம் நிறுவி, ஞானதீர்த்தம் அமைத்து சுவாமியையும், அம்பாளையும் பிரதிஷ்டை செய்து, சிவபெருமானை நோக்கி தவம் புரிந்து முடிவில் பஞ்சாக்கினி வளர்த்து, அக்கினிகுண்டத்தின் அருகே நின்று கடும்தவம் செய்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, மார்கழி மாதம், பூச நட்சத்திரம், வியாழக்கிழமை ஆகிய மூன்றும் இணைந்த ஒரு நன்னாளில், ஞானகுருவான ஈசன் வியாழனை தேவர்களுக்கெல்லாம் குருவாக, தேவகுரு பீடத்தை இத்தலத்தில் ஆதிகுருவிடம் ஆசி பெற்று, அன்று முதல் இவரே தேவர்களின் சபையில் இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும் குருவாகவும் ஆசிரியராகவும், ஆலோசகராகவும் திகழ்கிறார்.
குருவின் மனைவி தாரையை அபகரித்த சந்திரன், பிரம்மதேவரின் அறிவுரைப்படி தாரையை பிரகஸ்பதியிடம் ஒப்படைத்தார். சந்திரனும் தன் நிலை அறிந்து இக்குருத்துரோக செயலுக்கு மனம் வருந்தி வியாழனிடம் சாப விமோசனம் வேண்டினான். மனம் இரங்கிய வியாழன் "திருமுல்லைவாயில் சென்று மானதத்தீர்த்தமாடியும், தாருகாவனமான பெருஞ்சேரிக்கு சென்று ஞானதீர்த்தமாடிம் இறைவனை வழிபட்டால் நோய் நீங்கும்" என்றான். அதன்படி சந்திரனும் அவ்வாறே திருமுல்லைவாயிலுக்கு, சென்று வழிபட்டு, பின் பெருஞ்சேரிக்கு வந்து லிங்கத்திருமேனியை பிரதிஷ்டை செய்து சிவபெருமானை நோக்கி தவமிருந்து இறைவனை வழிபட்டதால் குஷ்டம் நீங்கி பாபவிமோசனம் பெற்றார்.
வியாழனின் விருப்பப்படி தாரையும் இத்தலத்து இறைவன் வாக்கு நல்கிய வள்ளல்- வாகீஸ்வரசுவாமியை வணங்கி பாபவிமோசனம் பெற்று கணவரான வியாழனிடம் சேர்ந்து தூய்மை அடைந்ததார்.
பார்வதியின் தந்தையான தக்கன் சிவபெருமானை அழைக்காமல் ஒரு யாகத்தை தொடங்கினார். இந்த யாகத்திற்கு தேவர்களும், பிரம்மனும் வந்தனர். யாகம் தொடங்கியது.அழைக்காத இந்த யாகத்திற்கு பார்வதி தேவி சென்று அவமானப்பட்டாள். இதைக் கண்ட சிவபெருமான் கோபப்பட்டு நெற்றிக் கண்ணைத் திறந்தார். தக்கனை அழிக்க வீரபத்திரனை தோற்றுவித்தார். தக்கனிடம் சென்ற வீரபத்திரன், தக்கனே! வேள்விக்குத் தலைவராகிய எங்கள் சிவபெருமானுக்குரிய அவிர்பாகத்தைக் கொடு. ஏன் வீணாக அழிகிறாய்? எனக் கேட்டும் தக்கன் உடன்படவில்லை.சிவபெருமானை மேலும் இகழ்ந்தான்.உக்கிர மூர்த்தியான வீரபத்திரருக்கு சினம் பொங்கியது. யாகத்தை அழித்ததுடன் யாகத்தில் பங்கேற்ற தேவர்கள், நவக்கிரக நாயகர்கள் மற்றும் பிரம்மா, சரஸ்வதி ஆகியோரை கடுமையாக தண்டித்தார்.
வீரபத்திரரால் பாதிக்கப்பட்ட சரஸ்வதி தன் நிலையைக் கண்டு வேதனைப்பட்டார். கணவரிடம் கூறி புலம்பினார். தவத்தால் எதையும் அடையலாம் என்று பிரம்மா கூற, சரஸ்வதி பெருஞ்சேரிக்கு வந்து, இங்கு கோயில் கொண்டிருக்கும் வாகீஸ்வர சுவாமியை நோக்கி பல ஆண்டுகள் தவமிருந்து, எல்லோருடைய நாவிலும் வீற்றிருந்து வாக்கு விருத்தியளிக்கும் பேற்றை எனக்குத் தந்தருள வேண்டும் என்று வேண்டி வரம் பெற்றார்.