வாகீஸ்வரர்-சுவாந்தர நாயகி

சுவாந்தர நாயகி

குரு வழிபட்ட லிங்கம்

சிவனை வழிபடும் சரஸ்வதி

தேவர்களுக்கெல்லாம் குருவாக வியாழன் வழிபட்டது

பிரகஸ்பதி என்கிற வியாழன் பிரம்ம தேவரின் மானச புத்திரர்களில் நடுவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்பவருக்கும் பிறந்த ஏழு பிள்ளைகளில் ஒருவர். ஆங்கிரஸ மகிரிஷி சப்தரிஷிகளில் ஒருவர். அவர் மகன் பிரகஸ்பதி, பெரியஞானி சகல சாஸ்திரங்களையும், வேத ஆகமங்களைக்கற்றறிந்து பல யாகங்களைச்செய்தும் காசியில் பல காலம் சிவபெருமானை வேண்டி கடும் தவம் இருந்து முக்காலத்தையும் உணரும் உன்னதமான சக்தியை அடைந்தார். அவருடைய மனைவியான தாரை பேரழகி. பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் அழகு படைத்தவள். வியாழனின் குருகுலத்தில் தங்கி பயின்ற மாணவர்களில் சந்திரனும் ஒருவன். வியாழன் இந்திரனைக்காணச் சென்றபோது, தன் மனைவியைப்பாதுகாக்கும் பணியை சந்திரனிடம் ஒப்படைத்துச்சென்றார். வந்தது வினை தாரையின் கண்களும், சந்திரனின் கண்களும் சங்கமித்தன ஊழ்வினைப்பயனால் இருவரும் காமவசப்பட்டடு தங்கள் இச்சையை நிறைவேற்றிக்கொண்டனர். திரும்பி வந்த வியாழன் இக்குரு துரோக செயலை தன் ஞான திருஷ்டியால் உணர்ந்தறிந்து சந்திரனுக்கு குஷ்டரோகம் உண்டாகும்படி சபித்தார். இருந்தும் அவரது மனக்கலக்கம் நீங்கவில்லை. தலயாத்திரைகள் புறப்பட்டார். பல தலங்களில் வழிபட்டடார் ஆனாலும் முழு நிம்மதி கிடைக்கவில்லை. இறுதியில் மயிலாடுதுறையிலுள்ள மயூரநாதரை வணங்கினார். அவருக்கு மனமிரங்கிய ஈசன், ""நின் கருத்து யாது?' என்று கேட்க, அதற்கு வியாழன், "ஞானம் பெற வேண்டும்; மனம் சாந்தி பெற வேண்டும்; தேவர்களுக்கெல்லாம் குருவாகும் பேறு பெற வேண்டும்'' என வரம் கேட்டார்.

மயூரநாதர் மனமிரங்கி, “நமக்கு தென்பால் தாருகாவனத்தில் லிங்கம் நிறுவி வழிபாடு செய்” என்றருளினார். அதன்படி வியாழன் தாருகாவனமான பெருஞ்சேரிக்கு வந்து ஞானதீர்த்தம் அமைத்து சுவாமியையும், அம்பாளையும் பிரதிஷ்டை செய்து, சிவபெருமானை நோக்கி தவமிருக்கத்தொடங்கினார். முடிவில் பஞ்சாக்கினி வளர்த்து, 'பஞ்சாக்கினி' என்றால் 'ஐந்துஅக்கினி' என்று பொருள்படும். நான்கு திசைகளிலும் நான்கு அக்கினி குண்டங்களையும், அவற்றின் நடுவே ஓர் அக்கினி குண்டத்தையும் கொண்டது பஞ்சாக்கினி எனப்படுவது. நடுவே உள்ள அக்கினிகுண்டத்தின் அருகே நின்று கடும்தவம் செய்யத்தொடங்கினார் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, மார்கழி மாதம், பூச நட்சத்திரம், வியாழக்கிழமை ஆகிய மூன்றும் இணைந்த ஒரு நன்னாளில், ஞானகுருவான ஈசன் வியாழனை தேவர்களுக்கெல்லாம் குருவாக, தேவகுரு பீடத்தை இத்தலத்தில் ஆதிகுரு அளித்தார். அன்று முதல் இவரே தேவர்களின் சபையில் இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும் குருவாகவும் ஆசிரியராகவும், ஆலோசகராகவும் திகழ்கிறார்.