திருக்கோவிலின் சிறப்பு
மார்கழி பூச நட்சத்திர நாளில் பஞ்சாக்னி ஹோமம் வெகு விமரிசையாக நடைபெறும்.“ஆசை நிறைவேறணும்னா பூசத்திலே வழிபாடு செய்”என்ற பொன்மொழிக்கேற்ப, ஜாதகம் இல்லாதவர்கள் கூட பூச நட்சத்திரநாளில் இங்குள்ள சிவகுருவாம் ஆதிகுருதெட்சிணாமூர்த்தியை வழிபட்டால் அனைத்து காரியங்களிளும் காலதாமதமாகாமல் தடையின்றி வெற்றிகிட்டும்.
நவக்கிரங்களில் குருவுக்குப்பிரதான இடம் அளிக்கப்படுகிறது. குருவின் 5, 7-ம் பார்வை சகலநலன்களையும் தருவதாகும். திருமணத்திற்கு குருபலம் வருவது முக்கியமாகக்கருதப்படுகிறது. இந்த குருவை வியாழ பகவான், பிரகஸ்பதி என்றும் அழைப்பர். இவரே தேவர்களுக்கெல்லாம் குரு. இந்த தேவகுருக்கு குருவாக, ஆதி குருவான தட்சிணாமூர்த்தி விளங்குகிறார்.
கல்விக்கு அரசியான சரஸ்வதி, சந்திரன், வியாழனின் மனைவி தாரை, தத்தசோழன் வழிபட்டு பேறு பெற்ற தோடல்லாமல் வியாழன் தேவகுருவாக பதவி ஏற்றதலம் என்பதால் சிறந்த குருபரிகாரத்தலமாக இது விளங்குகிறது. மேலும் நான்கு யுகங்களைக்குறிக்கும் நான்கு பைரவர் (சதுர் காலபைரவர்) திருமேனிகள் உள்ள சிறப்புத்தலம். இழந்ததை மீட்டுத்தருவதில் விரைந்து அருள்புரியும் கலியுகபைரவர் வீற்றிருக்கும் அற்புத ஸ்தலம் இது. எனவே பக்தர்கள் தங்களது வேண்டுதல், கோரிக்கைகள் நிறைவேறவும். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும், குருதோஷம் உள்ளவர்கள், குரு பலம் வேண்டுவோர், திருமணத்தடை, புத்திரதோஷம் நீங்க விழைவோர், வம்சவிருத்தி, பதவி உயர்வு வேண்டுவோர் வழிபடவேண்டிய உன்னத தலங்களில் ஒன்று பெருஞ்சேரி வாகீஸ்வரசுவாமி ஆலயம்.