தாருகாவனம்
ரிஷிகள் எல்லாம் தவம் செய்வதற்கு ஒரு நல்ல இடத்தைத்தேர்வு செய்ய பிரம்மாவை அணுகினர். பிரம்மா தர்ப்பையினால் ஒரு வளையம் செய்து, “இது பூமியில் எங்கு போய் விழுகின்றதோ அவ்விடத்தில் தவம் செய்யலாம்'” என்றுரைத்தார். அந்த தர்ப்பை வளையமானது முன்பு பெரும் வனமாக (காடாக) இருந்த இப்பிரதேசத்தில் வந்து விழுந்தது. அதன்படி இவ்வனத்தில் பல ரிஷிகளும், முனிவர்களும், யாகம் வளர்த்து தவம் செய்து வாழ்ந்து வந்தனர். எனவே அக்காலத்தில் இது தாருகவனம் எனப்புகழ் பெற்றதாக விளங்கியது. தாருகாவனம் என்றால் ஒரு தபோவனம், முனிவர்கள் பலர் தவம் செய்து வாழ்ந்த சிறப்புடைய காடு என்று பொருள்.
பெருஞ்சேரி
மக்கள் கூட்டம் அதிகமாக வசிக்கும் இடத்தை சேரி என்பர். நாற்பத்து எட்டாயிரம் (48,000) ரிஷிகளும், முனிவர்களும் தங்களது பத்தினிகளுடன் வாழ்ந்து வந்ததால் பெரியசேரி- பெருஞ்சேரி என்றும் பெயர் பெற்றது. பெருஞ்சேரிக்கு மிக அருகில் தாருகாவனம் என்கிற சிறு கிராமம் அமைந்துள்ளது . ஆம்! புராணகாலத்தில் வழங்கப்பட்ட அதே பெயர் தான் இன்றும் இக்கிராமத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.