தலம்: பெருஞ்சேரி என்கிற தாருகாவனம்

மூலவர்: இறைவன் வாகீஸ்வரசுவாமி, இறைவி சுவாதந்தரநாயகி.

சிறப்பு:

கல்விக்கு அரசியான சரஸ்வதி, சந்திரன், வியாழனின் மனைவி தாரை, தத்தசோழன் வழிபட்டு பேறு பெற்ற தோடல்லாமல் வியாழன் தேவகுருவாக பதவி ஏற்றதலம் என்பதால் சிறந்த குருபரிகாரத்தலமாக இது விளங்குகிறது. மேலும் நான்கு யுகங்களைக்குறிக்கும் நான்கு பைரவர் (சதுர் காலபைரவர்) திருமேனிகள் உள்ள சிறப்புத்தலம். இழந்ததை மீட்டுத்தருவதில் விரைந்து அருள்புரியும் கலியுகபைரவர் வீற்றிருக்கும் அற்புத ஸ்தலம் இது. எனவே பக்தர்கள் தங்களது வேண்டுதல், கோரிக்கைகள் நிறைவேறவும். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும், குருதோஷம் உள்ளவர்கள், குரு பலம் வேண்டுவோர், திருமணத்தடை, புத்திரதோஷம் நீங்க விழைவோர், வம்சவிருத்தி, பதவி உயர்வு வேண்டுவோர் வழிபடவேண்டிய உன்னத தலங்களில் ஒன்று பெருஞ்சேரி வாகீஸ்வரசுவாமி ஆலயம்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையின் நடுநாயகமாக விளங்குகிறது மாயூரநாதர் திருக்கோவில். உமாதேவி மயில் வடிவில் சிவனை வழிபட்ட தலம் இது. இங்குள்ள சிவகுருவே நான்கு திக்கிலும் நான்கு வள்ளல்களாக (நான்கு தட்சிணாமூர்த்திகளாக) அருள்பாலிக்கிறார். வடக்கே வள்ளலார் கோவிலில் கைகாட்டும் வள்ளலாகவும்; கிழக்கே விளநகரில் துறை காட்டும் வள்ளலாகவும்; தெற்கே பெருஞ்சேரியில் வாக்கு நல்கிய வள்ளலாகவும்; மேற்கே மூவலூரில் வழிகாட்டும் வள்ளலாகவும் திகழ்கிறார்.

ஆலயம் திறந்திருக்கும் நேரம்

காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரையிலும்;
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.